வீட்டுக்குள் ஓர் அரிசி ஆலை... 45 நிமிடத்தில் 100 கிலோ அரைக்கலாம்!

ரு காலத்தில் வீட்டுக்கு வீடு உரல், உலக்கை இருக்கும். நெல்லை வேகவைத்தோ பச்சையாகவோ உரலில் இட்டுக் குத்தி, புடைத்துத் தேவையான அரிசியை எடுத்துவைத்துக் கொள்வார்கள். தற்போது நவீன அரிசி ஆலைகள் வந்தபிறகு, உரல் உலக்கைகள் காணாமல் போய்விட்டன. பெரும்பாலான விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் நெல்லை மொத்தமாக விற்பனை செய்துவிட்டு வீட்டுத் தேவைக்கு, அரிசி வாங்கிதான் சமைக்கிறார்கள். குறைந்த அளவு நெல்லை ஆலைக்கு எடுத்துச்சென்று அரைத்து வருவதில் உள்ள சிரமங்களை மனதில் வைத்துதான், அரிசியை விலைக்கு வாங்குகிறார்கள். இப்படிப்பட்ட விவசாயிகள் பலருக்கு ‘நாம் விளைவித்த நெல்லை நம்மால் சாப்பிட முடியவில்லையே’ என்ற ஆதங்கம் இருக்கும். அப்படிப்பட்டவர்களின் ஆசையைத் தீர்க்கும் விதமாக ஒரு சிறிய நெல் அரைக்கும் இயந்திரத்தைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளனர், சென்னையைச் சேர்ந்த ‘நல்லகீரை’ அமைப்பினர். வீட்டு மின்சாரத்திலேயே, இந்த இயந்திரத்தை இயக்க முடியுமென்பதால் இதற்கு வரவேற்பு பெருகி வருகிறது.  
இது தொடர்பாக நல்லகீரை அமைப்பைச் சேர்ந்த ஜெகனிடம் பேசினோம். “பசுமை விகடன்தான் எங்களை வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்துச்சு. அதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகள்ல இருந்தும் விவசாயிகள் எங்ககிட்ட பேசினாங்க. அந்த வகையில் சத்தீஸ்கர் மாநில விவசாயிகளுக்குக் கீரைச்சாகுபடி தொடர்பா பயிற்சி அளிக்கப் போனோம். அங்கதான் இந்த இயந்திரத்தைப் பார்த்தோம். அந்த மாநில மக்கள் வீடுகள்லயே இந்த இயந்திரத்தை வெச்சு நெல்லை அரைச்சுட்டு இருந்தாங்க. தமிழக மக்களுக்கும் பயன்படுமேனு யோசிச்சு, அந்த இயந்திரத்தைத் தயார் செய்ற இடத்துக்குப் போய், நாலஞ்சு மிஷின்களை வாங்கிட்டு வந்தோம். அதை நண்பர்கள் சிலர் வாங்கிப் பயன்படுத்திட்டுருக்காங்க. இப்போ நிறைய பேர் இந்த இயந்திரம் வேணும்னு கேக்குறாங்க. அவங்களுக்காக இயந்திரங்களை ஆர்டர் பண்ணிருக்கோம். முதல் முறை நாங்க வாங்கிட்டு வந்தப்போ, ஒரு மிஷினுக்கு அடக்க விலை 40 ஆயிரம் ரூபாய் ஆச்சு. இப்ப மொத்தமா ஆர்டர் பண்ணிருக்கறதால, அடக்க விலை 36 ஆயிரம் ரூபாய் வருது. நாங்க லாபம் எதுவும் வெச்சுக்காம அடக்க விலைக்குத்தான் வாங்கிக் கொடுக்குறோம்” என்ற ஜெகன், இயந்திரத்தின் தொழில்நுட்ப விவரங்களைச் சொன்னார்.  
“இதை இயக்குறது ரொம்பச் சுலபம். கிரைண்டர் வைக்கிற அளவு இடமே போதுமானது. மூணு ஹெச்.பி. மோட்டார்ல இது இயங்குது. ஒரு முனை (சிங்கிள் பேஸ்) மின்சார இணைப்பே போதும். நூறு கிலோ நெல்லை 45 நிமிஷத்துல அரைச்சிடலாம். 60% முதல் 65% வரை அரிசி கிடைக்கும். நெல்லை பச்சையாவும் வேக வெச்சும் அரைக்கலாம். இந்த மிஷினுக்கு மானியம் கிடைச்சா, இன்னும் குறைவான விலையில விவசாயிகளுக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கு” என்றார் ஜெகன். 

இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி வரும் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஹரிஹரனைச் சந்தித்தோம். இயந்திரத்தை இயக்கிக்காட்டிய ஹரிஹரன், மணிப்பூர் ரக நெல்லை உள்ளே கொட்டினார். அடுத்த சில வினாடிகளில் மணிமணியாக அரிசி வெளியே வந்து விழுந்தது. 

அதைக் கையில் எடுத்துக்காட்டிய ஹரிஹரன், “எனக்கு இயற்கை விவசாயத்துல ரொம்ப ஆர்வம். நாட்டு மாடுகள், வீட்டு விலங்குகள் வளர்ப்புலயும் ஆர்வம் அதிகம். ஆரம்பத்துல நேரடியா விவசாயம் செய்யலை. ஆனா, நாட்டு மாடுகளை வாங்கி வளர்த்துட்டு இருந்தேன். அப்ப நண்பர்கள், உறவினர்களோட குடும்பத்துக்காவது ஆரோக்கியமான உணவு வகைகளைக் கொடுப்போம்னு இயற்கை முறையில விளையுற அரிசி, பருப்புன்னு வாங்கிக் கொடுப்பேன். அதைப் பயன்படுத்திப் பார்த்தவங்க, தொடர்ந்து என்கிட்ட கேக்க ஆரம்பிச்சாங்க. அப்பத்தான், அரிசியா வாங்குறதைவிட, நெல்லா வாங்கி அரைச்சுக் குடுக்கலாமேன்னு தோணுச்சு.  
திருச்சியில ஒரு கூட்டத்துல நல்லகீரை ஜெகனைச் சந்திச்சப்போ, என்னோட எண்ணத்தைச் சொன்னேன். அவர்தான் இந்த மிஷின் பத்திச் சொன்னார். உடனே சென்னைக்குப் போய் அவர்கிட்ட இருந்து ஒரு மிஷினை வாங்கிட்டு வந்துட்டேன். இயற்கை விவசாயிகளிடமிருந்து நெல்லை வாங்கி, நானே அரைச்சுக்கிட்டுருக்கேன். என்கிட்ட 60 நாட்டு மாடுங்க இருக்கு. நெல் அரைக்கும்போது கிடைக்குற தவுடு மாடுகளுக்குத் தீவனமாகிடுது. மிஷின்ல பெரிய தொழில்நுட்பம் எதுவும் இல்லை. அரைக்கும்போது நெல்லை அதிகமா கொட்டுனா, பெல்ட் இழுக்குறதுக்குச் சிரமப்படும். கொஞ்சமா ஒரே சீரா கொட்டிட்டு இருந்தால் போதுமானது. நான் வாங்கி அஞ்சு மாசம் ஆச்சு. இதுவரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லாம ஓடிகிட்டு இருக்கு. 

மோட்டா, சன்னம்னு எல்லா ரக நெல்லையும் இதுல அரைச்சிருக்கேன். ரகம், ஈரப்பதத்தைப் பொறுத்து அரிசி கிடைக்கும். எனக்கு 100 கிலோ நெல்லுக்கு 65 கிலோ அரிசி கிடைச்சிருக்கு. தவிடு சேகரிக்கத் தனியா ஒரு பை இருக்கு. அதுல தவிடு விழுந்திடும். ஈரப்பதம் சரியா இல்லன்னா, அரிசி உடையும். அதுல மட்டும் கவனமா இருக்கணும். பெரும்பாலும் குருணை வர்றதில்லை. ஒண்ணு ரெண்டு வந்தாலும், அது தனியா விழுந்திடும். கரன்ட் பில்லும் அதிகமா ஆகுறதில்லை. இந்த மிஷின் இருக்கறதால, தேவைப்படுற சமயங்கள்ல உடனடியா அரைச்சுக்க முடியுது. இந்த மிஷின்ல அரைக்கிறப்போ அரிசியோட மேல்பகுதியில தோலை மட்டுமே நீக்கும். பிறகு அரிசி என்ன கலரோ அதே கலர் கிடைக்குது” என்ற ஹரிஹரன் நிறைவாக, 

“உள்ளூர் விவசாயிங்க சிலபேர் வந்து பார்த்துட்டு, அவங்க நெல்லைக் கொண்டு வந்து அரைச்சுட்டுப் போறாங்க. அரைக்கிற கூலியா தவிட்டைக் கொடுத்துடுறாங்க. நெல் விவசாயிகளுக்கு இது அவசியமான மிஷின்தான்” என்றார். 

தொடர்புக்கு, செல்போன்: ஹரிஹரன்: 73396 97444, ஜெகன்: 90420 11768.

“தென்னிந்தியாவிலும் கிடைக்கும்!”

ர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையத்தின் தானிய அறிவியல் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் ஸ்ரீனிவாஸிடம் பேசினோம். “நெல் அரைக்கும் இயந்திரங்கள், பயறு வகைகளை அரைக்கும் இயந்திரங்கள், சிறுதானியங்களை அரைக்கும் இயந்திரங்கள், காய்கறிகள், பழங்களிலிருந்து சாறு எடுக்கும் இயந்திரங்கள், உணவைப் பதப்படுத்ததும் இயந்திரங்கள் என்று பலவகையான இயந்திரங்களுக்கான தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து, அவற்றைக் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வழங்குகிறோம்.  
அதன்படி நெல் அரைக்கும் கருவி (Tiny Rice Mill) எங்கள் மையத்திலிருந்து உருவாக்கப்பட்டு சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதன் ஆரம்ப விலை 26 ஆயிரம் ரூபாயாக இருந்தது. அரைக்கும் நெல்லின் அளவைப் பொறுத்துத் தற்போது 40 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை விவசாயத்தில் நெல்லை விளைவித்து அதை அரைத்து விற்பனை செய்ய நினைப்பவர்களுக்கு இதுபோன்ற கருவிகள் வரப்பிரசாதம். தென்னிந்தியாவில் உள்ள மாவு அரைக்கும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களிடம் இதுபோன்ற கருவிகள் கிடைக்கும்” என்றார். 

தொடர்புக்கு, தொலைபேசி: 0821 2510843

Comments